விபத்தில் இறந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகள்-பொறுப்பேற்க எவருமில்லை
காலி உணவட்டுன மஹாரம்ப தொடருந்து கடவையில் ரஜரட்ட ரஜின தொடருந்தில் முச்சக்கர வண்டி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழந்த நிலையில், தனித்து போயுள்ள அவரது நான்கு வயது மகள் நேற்றிரவு வரை முன்பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய பெண் இந்த குழந்தையுடன் உணவட்டுன பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இவர்களின் உறவினர்கள் எவரும் இலங்கையில் இல்லை என்பதுடன் ரஷ்ய தூதரகத்தின் ஊடாக உறவினர்களை கண்டறியும் வரை பிள்ளையை முன்பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முன்பள்ளி ரஷ்ய பெண்ணொருவரால் நடத்தப்பட்டு வருகிறது. பெலியத்தையில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ரஜரட்ட ரஜின தொடருந்தில், ரஷ்ய பெண்ணை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மோதியுள்ளது.
பிள்ளையை முன்பள்ளியில் விட்டு, விட்டு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
விபத்து நடந்த தொடருந்து கடவையில் எச்சரிக்கை சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளதுடன் அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி பாதுகாப்பற்ற வகையில் தொடருந்து கடவையில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றதால், இந்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் நடக்கும் முன்னர் அருகில் இருந்தவர்கள் முச்சக்கர வண்டியை தொடருந்து கடவையில் செலுத்த வேண்டாம் கூறிய போதிலும் அதன் சாரதி அதனை பொருட்படுத்தாது முச்சக்கர வண்டியை செலுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் டயரியா என்ற ரஷ்ய பெண்ணும் கிந்தொட்ட பரணவிதான சரத் நாணயக்கார என்ற ஹபுகல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகள்-பொறுப்பேற்க எவருமில்லை