யாழ் அரியாலை மாம்பழம் சந்தியில் சற்றுமுன் ரயிலுடன் தனியார் பேரூந்து மோதியதில் 31 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் இடம் பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்தவர் தனபாலசிங்கம் சுரேந்தர் வயது 31 என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
அரியாலை ஏ.பி வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ.பி. வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மினிவான் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.