யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகத்தில் காரில் பயணித்த 26 மற்றும் 27 வயதான இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது, மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரை மறித்து பொலிஸார் ஆவணங்களைப் பரிசோதித்த போது, காரிலிருந்தவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவர்களைச் சோதனையிட்டனர்.
சாரதியிடமிருந்து 600 மில்லிகிராம் உயிர்கொல்லி ஹெரோய்னும், அவருடன் பயணித்தவரிடமிருந்து 430 மில்லிகிராம் உயிர்கொல்லி ஹெரோய்னும் மீட்கப்பட்டது.
காரின் சாரதியின் சகோதரர் மருத்துவர் என்று விசாரணைகளில் தெரியவந்தது.
அவர்களை 14 நாள் விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
காரில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவரிடம் 600 மில்லிகிராமும் மற்றைய இளைஞனிடம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையான பகுதியொன்றில் வாழும் ஆயுர்வேத வைத்தியரின் சகோதரனும், அவரது நண்பருமே கைதாகினர்.
ஆயுர்வேத வைத்தியரின் சகோதரன் கொடிகாமத்தில் ஸ்ரூடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், கிளிநொச்சியிலிருந்து அவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் வாங்கி வந்தது தெரிய வந்தது.
கடந்த சில வருடங்களாகவே அவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.