Home Jaffna News யாழில் பற்றைக்குள் காரை நிறுத்திவிட்டு தலைமறைவான கும்பல்: பின்னணியில் கியூஆர் குறியீடு

யாழில் பற்றைக்குள் காரை நிறுத்திவிட்டு தலைமறைவான கும்பல்: பின்னணியில் கியூஆர் குறியீடு

10

தென்மராட்சி, மறன்புலவு பகுதியில் சந்தேகத்திற்கிடமான காரொன்றை பொலிசார் சோதனையிட முயன்ற போது, தப்பிச் சென்ற நபர்கள், பற்றைக்காட்டுக்குள் காரை கைவிட்டு, தலைமறைவாகியுள்ளனர்.

சாவகச்சேரி, பொலிசாரால் கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நாவற்குழி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவத்துடன், காரில் இருந்தவர்களிற்கு தொடர்பிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த 15ஆம் திகதி இரவு 11 மணியளவில், நாவற்குழியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்குள் வாள்வெட்டு தாக்குதல் நடந்திருந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், கியூஆர் குறியீடு இல்லாமல் பெற்றோல் நிரப்புமாறு கேட்டனர். எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் அதற்கு மறுத்த போது, அவரை விரட்டி விரட்டி வாளால் வெட்டினார்கள்.

கையில் காயமடைந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

வாள்வெட்டு சம்பவம் நடந்த அன்று, கார் ஒன்றில் வந்தவர்களும் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்புமாறு கேட்டுள்ளனர். எனினும், அங்கிருந்த ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதற்கு பின்னரே, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்றதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.

எரிபொருள் நிரப்பு நிலைய சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில், காரை அடையாளம் கண்ட பொலிசார், அந்த கார் மறவன்புலவு பகுதியில் உள்ளதை அறிந்து, நேற்று முன்தினம் அங்கு சென்றனர்

காரை பொலிசார் சோதனையிட முயன்ற போது, சில இளைஞர்கள் காருடன் தப்பியோடினர். பொலிசார் விரட்டிச் சென்ற போது, மறவன்புலவு பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் காரை கைவிட்டு, தப்பியோடி விட்டனர்.

கார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த கார் மஹிந்தலையை சேர்ந்த சிங்கள நபர் ஒருவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அவர் வாடகைக்கு கார்களை விநியோகிக்கிறார். அவரிடம் வாடகைக்கு காரை பெற்ற தென்மராட்சி கும்பலொன்று, குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

காரின் உரிமையாளரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, காரின் கதவுகளை திறந்து பொலிசார் சோதனையிட்டதில், சில ஆடைகளும், கைத்தொலைபேசியொன்றும் காணப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட .இளைஞன் ஒருவர் அணிந்து வந்த ரீஷேர்டை ஒத்த ரீஷேர்ட் காருக்குள் காணப்பட்டது. இதேவேளை, கார் இன்னும் முழுமையாக சோதனையிடப்பட்டு முடியவில்லை.

வாள்வெட்டில் ஈடுபட்டவர்களுக்கும், காரில் இருந்தவர்களிற்கும் தொடர்பிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் குற்றக்கும்பல் ஒன்றை சேர்ந்தவர்களா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

யாழில் பற்றைக்குள் காரை நிறுத்திவிட்டு தலைமறைவான கும்பல்: பின்னணியில் கியூஆர் குறியீடு - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleஐயப்பன் கோயிலுக்கு சென்றபோது ஏற்பட்ட காதல் சிவராத்திரியில் சில்மிசத்தில் முடிந்தது: யாழில் காதலி வீட்டில் இரகசியமாக தங்கிய வவுனியா இளைஞனுக்கு விளக்கமறியல்
Next articleயாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் பலி!