வடமராட்சி கிழக்கில் பிரசவித்த சிசு நிலத்தில் புதைக்கப்பட்ட விவகாரத்தில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு வத்திராயனில் நேற்று (2) மாலை சிசுவொன்றின் சடலத்தை நாய் இழுத்து சென்ற போது, பிரதேசவாசிகள் சிலர் கண்டுள்ளனர். உடனடியாக நாயை விரட்டி, சிசுவின் சடலத்தை மீட்டதுடன், மருதங்கேணி பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி பொலிசாரும், பிரதேசவாசிகளும் நடத்திய தேடுதலில் சிசுவின் சடலம் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டிருந்தது.
பிரசவித்த ஓரிரு நாளில் சிசு புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
வீடொன்றின் பின்னாலுள்ள மணல் பிரதேசத்திலேயே சிசுவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டிலிருந்த பெண் கர்ப்பவதியாக இருந்தார் என்ற தகவலின் அடிப்படையில் பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அந்தப் பெண்ணிற்கு 36 வயது. திருமணமாகி, கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து வசிக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
தவறான தொடர்பின் மூலம் தற்போது குழந்தை பிரசவித்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி குழந்தை இறந்து பிறந்ததால் புதைத்ததாக அவர் பொலிசாரிடம் தெரிவித்தார்.
பருத்தித்துறை நீதிவான் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், குழந்தை பிரசவித்த பெண்ணை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.