ஹட்டன் ஏழு கன்னியர் மலைக்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக சென்று சில நாட்கள் முகாமிட்டு தங்கி இருந்த மூன்று மருத்துவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய அனுமதிப்பத்திரத்தை பெற வனப்பகுதிக்குள் சென்று முகாமிட்டிருந்த இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மூன்று மருத்துவர்கள் மற்றும் அவர்களின் மூன்று நண்பர்கள் கடந்த 2 ஆம் திகதி மாலை ஹட்டன் நோர்ட்டன்பிரிஜ் பகுதியின் ஊடாக ஏழு கன்னியர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
இதன் பின்னர், அவர்கள் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய நோர்ட்டன்பிரிஜ் பொலிஸாரும் நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளும் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
தேடுதல் நடத்திக்கொண்டிருந்த போது வனப்பகுதிக்குள் சென்றிருந்த ஆறு பேர் வெளியில் வரும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் மருத்துவர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் செல்ல வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரிடம் எழுத்து மூலமான அனுமதிப்பத்திரத்தை பெற வேண்டும். அந்த அனுமதிப்பத்திரமின்றி எவரும் வனப்பகுதிகளுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.