மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையன் அங்கு தனியாக இருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தை கத்தியால் வெட்டி அவரின் கழுத்தில் இருந்த 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை (2) காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொம்மாந்துறை பகுதியில் தனிமையில் இருந்த 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் வீட்டினுள் சம்பவதினமான இன்று காலை 7.30 மணிக்கு துவிச்சக்கர வண்டியில் தனியாக சென்ற கொள்ளையன் ஒருவன் உப்புகுந்து அவருடன் உரையாடிய நிலையில் அவர் வீட்டினுள் இருந்து வெளியே வந்ததையடுத்து அவரின் கழுத்தை கத்தியால் குத்தி அவரின் கழுத்தில் இருந்த சுமார் 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் தப்பி ஓடியுள்ளான்.
இதனையடுத்து வயோதிப பெண் சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவ இடத்துக்கு சென்ற ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தடவியல் பிரிவு பொலிசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.