மஹியங்கனை வைத்தியசாலை வளாகத்துக்குள் தான் பெற்றெடுத்த சிசுவை கைவிட்டு சென்ற வவுனியாவை சேர்ந்தபெண் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது மஹியங்கனையில் வசிக்கும் ஐந்து பிள்ளைகளின் தாயே கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது கணவர் தன்னை விட்டுச் சென்றதாக பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மஹியங்கனைக்கு அருகில் உள்ள வீட்டிற்கு வந்த தான் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த திருமணத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். கர்ப்பத்தை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும் தான் கர்ப்பமானதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட காயம் காரணமாக அவரது குபிள்ளைகளில் ஒருவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாய் தனது பிள்ளையுடன் வைத்தியசாலையில் தங்க வேண்டியிருந்தது.
ஆனால், மருத்துவமனையில் இருந்தபோதே அவருக்கு குழந்தை பிறந்தது. இதுபற்றி யாருக்கும் தெரிவிக்காமல் குழந்தையுடன் மருத்துவமனையை விட்டு ஓட முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
பிரசவமான சிசுவை அக்குளில் வைத்துக்கொண்டு மருத்துவமனையின் சுவர் ஏறி குதிக்க முயன்றுள்ளார். ஆனால், சிசு சுவரில் இருந்து தவறி விழுந்தது. அதன்பிறகு அவர் சிசுவை கவனிக்காமல் அமைதியாக தனது குபிள்ளை சிகிச்சை பெறும் வார்டுக்கு திரும்பினார்.
பின்னர் சிசு அழும் சத்தம் கேட்டு வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
விடுதியில் இந்தப் பெண்ணுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டதால் சந்தேகத்தில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை தெரிய வந்தது.
மஹியங்கனை பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் தெஹிகம, இது மிகவும் மனிதாபிமான விடயம் எனவும், தாய் தனது குழந்தையை விட்டுச் செல்வதற்கு பல காரணங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். எனவே இவ்வாறான ஒரு சம்பவத்தில் பிள்ளைகளை வீதியில் விடாமல் வைத்தியசாலைக்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ கொண்டு வருமாறும், அவ்வாறான சிறுவர்களை பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் பொலிஸார் தயாராக இருப்பதாகவும் கேட்டுக்கொண்டார்.