Home Indian news பாதிரியார்கள் கைப்படாத யாராவது நம்மிடம் இருக்கிறார்களா? அருட்சகோதரி லூசி களப்புரா பகீர் தகவல்

பாதிரியார்கள் கைப்படாத யாராவது நம்மிடம் இருக்கிறார்களா? அருட்சகோதரி லூசி களப்புரா பகீர் தகவல்

15

“கன்னியர் மடங்களில் கண்கலங்கும் சகோதரிகளின் குரல்கள் என் காதுகளை எட்டுகின்றன. ஆண் மேலாதிக்கத்திற்கும், பாதிரியார்கள் ஏகாதிபத்தியத்திற்கும் அடிமையாக இருக்கின்ற சகோதரிகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக என்னுடைய எழுத்து அமையும் என நம்புகிறேன்” என்கிற கத்தோலிக்க சகோதரி லூசி களப்புராவின், “கர்த்தரின் நாமத்தில்” நூலினை வாசித்து முடித்தேன்.

கத்தோலிக்க கிறித்தவர்களைப் பொறுத்தளவில், சேவை செய்வதற்கு ஒரேயொரு வழி பெண்கள் கன்னியராகவும், ஆண்கள் பாதிரியராகவும் ஆக்குவதுதான். அப்படித்தான் ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மேலும், பொருளாதார பாரத்தைத் தாங்க இயலாத பெற்றோர்கள், ‘இறைவா, என்னுடைய குழந்தையை உமக்கு காணிக்கையாக்கி விடுகிறேன்’ என்பார்கள். அந்த குழந்தையின் விருப்பத்தை அறியாமலேயே சபைக்கு அனுப்பி விடுவார்கள்.

இங்கு சற்று வித்தியாசமாக, பதினைந்து வயதில், முழுநேர சமூகப்பணி செய்வதற்காக கன்னியர் மடத்தில் சேர்வதுதான் நல்லதென லூசி களப்புரா முடிவெடுக்கிறார். பதினைந்து வயது என்பது மங்கைப் பருவம். பூப்பெய்து தாவணி போடும் பருவம். அந்த வயதில் அப்படியெல்லாம் ஆசை ஏற்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அது, முடிவெடுக்க அறியாத பருவம். அந்த பருவத்தில்தான் லூசி களப்புரா துறவற வாழ்க்கையை தேர்வு செய்கிறார்.

அந்த வயதில்தான் மங்கைகளை கொத்திக்கொண்டு செல்வதற்கு கழுகுகள் வட்டமிடும். இதைக்குறித்து லூசி களப்புரா, “இது, ‘தெய்வத்தின் அழைப்பு’ என்றுகூட சொல்வார்கள்”. மேலும், “தவறாக வழிநடத்தி, திசை திருப்பி குருத்துவத்திற்கும், மடங்களுக்கும் ஆட்களை சேர்ப்பது என்ற இலட்சியம் நிறைவேற்றப்படுகிறது” என்கிறார். அது, உண்மைதான்.

கன்னியர் இல்லத்தில் அடியெடுத்து வைத்த லூசி களப்புரா சொல்கிறார்: “என் மனம் விரும்பாத சில சம்பவங்கள் மடத்தில் நடந்தது. அங்கு கன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொருவர் குறை கூறுகிறார்கள். இதுவெல்லாம் என் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது”. கன்னியர் மடத்தில், சாதிவெறி, மொழிவெறி, பதவிவெறி, குறைகூறுதல், போட்டி மற்றும் பொறாமை ஆகியவை இல்லாத ஒரு சபையை உலகில் காண முடியாது.

கன்னியர்களுக்கு மூன்றுவருட பயிற்சி காலங்கள் உண்டு. “கன்னியர் ஆகுவதற்கு கட்டணமாக 20,000/- ரூபாயை அப்பா மடத்திற்கு செலுத்தினார்” என்கிறார் லூசி களப்புரா. கன்னியர் இல்லத்தில் சேரும்போதும், கன்னியர் ஆகும்போதும், வசதியான பெற்றோரிடம் அன்பளிப்பு என்கிற பெயரில் பணம் வசூலிக்கிறார்கள்.

அவர் மேலும், “பெண்ணிற்கு வரதட்சணையாக தர வேண்டிய தொகையை சந்நியாசத்திற்குரிய கட்டணமாக வாங்கி விடுவார்கள்” என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்த குற்றச்சாட்டு ஏற்கத் தகுந்தது அல்ல. எவ்வளவோ ஏழை குடும்பத்தை சார்ந்த பெண்களும் கன்னியராக உள்ளனர். அவர்களில் யாரும் அப்படி பணம் கொடுப்பதில்லை. வசதியானவர்களிடம் அன்பளிப்பு பெறப்படுவதுண்டு. அதனை, அடியேன் பார்த்திருக்கிறேன்.

மூன்றுவருட படிப்பிற்குப் பின்பாக கற்பு, ஏழ்மை மற்றும் கீழ்படிதல் ஆகிய உறுதிமொழிகளை கன்னியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அன்றுதான் கன்னியருக்கான உடையை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்த சடங்கு பல இடங்களில் ஏழ்மை என்கிற உறுதிமொழியைத் தாண்டி பெரும் பணச்செலவில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். அதைத்தான் லூசி களப்புரா, “பொதுவாக, இந்த சடங்குகளை ஆர்ப்பாட்டமாக நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்கிறார்.

பாதிரியார்கள் கைப்படாத யாராவது நம்மிடம் இருக்கிறார்களா? அருட்சகோதரி லூசி களப்புரா பகீர் தகவல் - mutamil News - 24x7 Tamil Breaking News Website

மடங்களைப் பொறுத்தளவில் பல்வேறு நெறிமுறைகள் புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்படும். அது, மடத்தின் மேலதிகாரியைப் பொருத்தது. பாதிரியாரும், ஆயரும் அதிகாரம் செலுத்துவதும் உண்டும். இதுகுறித்து, “கர்த்தரின் நாமத்தில்”, பிற மடங்களிலிருந்து வரும் கன்னியர்களிடம் பேசக்கூடாது. வங்கிக்கணக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. கன்னியர்கள் பெறும் அரசு சம்பளத்தை மடத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

ஏழ்மையை ஆடையாக தரிக்க ஓர் அடிமைபோல் வேலை செய்திட வேண்டும். மாதவிடாய் காலத்தில் வழங்கப்படும் நாப்கின்கள் மோசம் என்றோ அல்லது உணவு சரியில்லை என்றோ குறை சொல்லக்கூடாது. மேலதிகாரியின் வார்த்தைகளை மீறக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள். இடமாற்றம் செய்யப்படுவார்கள். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் சபையை விட்டு நீக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட மேல் பதவிகள் நேர்மையாக, வெளிப்படையாக, சனநாயக முறையில் ஒருபோதும் நடப்பதில்லை என்கிறார். இதுவும் உண்மைதான்.

ஆண்டிற்கு ஒருமுறை கன்னியர்கள் அவர்களுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம். ஆனால், இரவில் அருகிலுள்ள கன்னியர் மடத்தில் சென்று தங்க வேண்டும். அதாவது, அவர்கள் பத்தினிகள் என்பது ஊருக்குத் தெரிய வேண்டுமாம். ஆனால், கன்னியர்கள் யாரும் ஒருபோதும் பத்தினியாக இருந்ததில்லை.

லூசி களப்புரா சொல்கிறார், ஒரு கன்னியர் என்னை அவருடன் தூங்க வற்புறுத்தினார். “விருப்பம் இல்லாமல்தான் நான் அங்கே படுத்தேன். அவள் என்னை தழுவினாள். உடலில் முத்தமிட்டாள். வாழ்க்கையில் முதன்முதலாக 24 வயதில் பாலியல் தொடர்பான இந்த அனுபவம் என்மேல் திணிக்கப்பட்டது”. இந்த கன்னியர்களின் ஒருபால் உறவை, “ஆமென்” நூல் அதிகமாகவே பேசுகிறது.

கன்னியர் பயிற்சிப் படிப்பிற்குப் பின்பாக, ஆசிரியராக அல்லது செவிலியராக என ஏதாவது ஒரு படிப்பை அவர்கள் தொடருகிறார்கள். பூந்தியில், ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியராக லூசி களப்புரா இருந்திருக்கிறார். அதுகுறித்து, “பள்ளி நிர்வாகியாக கோவாவை சேர்ந்த பாதிரியார் இருந்தார். அவருக்கு எங்கள் மடத்திலிருந்து சாப்பாடு வழங்குவார்கள்.

மடம், பள்ளிக்கூடம், அவரது அறை எல்லாம் அருகருகில் இருந்தது. எனினும், அவர் கன்னியர்களாகிய எங்களுடனே தங்க விரும்பினார். ஒருமுறை அவரது அறைக்கு என்னை அழைத்தபோது நான் மறுத்தேன். இதனால், அவர் கோபமானார். பின்னர், பொது இடத்தில் என்னை அவமதிக்கத் துவங்கினார். அவரது அறைக்குச் சென்றுவந்த கன்னியர்கள் அவரது அன்புக்குள்ளானார்கள் என்பது வேறு விசயம்” என்கிறார் லூசி களப்புரா.

இந்த நூலில் பல செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதனை நூலினை வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது. வெளிப்படையாக யாருடைய பெயரையும் லூசி களப்புரா குறிப்பிடவில்லை. “பாதிரியார்களிடமிருந்து எனக்கு நான்கு முறை பாலியல் அத்துமீறல் நடந்தது” என்கிறார். சிலவற்றை பட்டும் படாமலும் சொல்லிவிட்டுப் போகிறார்.

கன்னியர்கள் சபையைவிட்டு வெளியே வந்தால், அவளுக்கு ‘இருப்பு’ கொள்ளவில்லை. அதனால்தான் வெளியே வந்துவிட்டாள் என கோள் சொல்பவர்கள் உண்டு. வெளியே சென்றால் பெற்றோர் சிரமப்படுவார்களே என்று நினைக்கிற கன்னியர்களும் உண்டு. பாலியல் இன்பத்தை அனுபவித்து, அதனை ஒரு பொருட்டாக கருதாத கன்னியர்களும் உண்டு. இருப்பினும், விவிலிய வசனங்கள் அவர்களுடைய மனங்களில் அடிக்கடி கீறலை உருவாக்கிச் சென்றுவிடுகிறது. பெண் குழந்தைகளை கன்னியர்களாக அனுப்புவதை பெற்றோர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இருப்பினும், கடவுள் முன்பாக ஏழ்மையையும் கீழ்ப்படிதலையும் ஆடையை தரித்த லூசி களப்புரா, மேலதிகாரிக்கு கீழ்படியாமல் சொந்தமாக வாகனம் வாங்கினேன் என சொல்வது, அவர் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு முரணாக சபை பார்க்கிறது. கன்னியர்கள், சபைக்கு அடிமையாக வாழ வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இப்பொழுது இன்னொரு கேள்வி எழும். ஏழ்மையையும் கீழ்ப்படிதலையும் ஆடையாக தரித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியார்கள் வாகனம் வைத்திருக்கிறார்களே. அது எப்படி சாத்தியமாகிறது? ஏழ்மையும் கீழ்ப்படிதலும் செத்துப் போய்விட்டதா? பாப்பரசர் புல்லட் வாகனத்தில் செல்கிறாரே? அவர் ஏழ்மையை கொன்றுவிட்டாரா? ஆண் பெண் சமத்துவ உரிமை என்னாகிறது?

ஆயர் பிராங்கோவுக்கு எதிராக போராட்டத்தில் லூசி களப்புரா கலந்து கொண்டது பாராட்டப்பட வேண்டியது. பாதிக்கப்பட்ட கன்னியருக்கு ஆதரவாக அவர் செயல்பட்டது, சபைக்கு அழகல்ல என்பதால் சபையை விட்டு லூசி களப்புரா வெளியேற்றிவிட்டார். பாதிக்கப்பட்ட கன்னியரையும் வெளியேற்றிவிட்டார்கள். கன்னியர் பாலியல் வன்முறைக்கு ஆளானால், அவளை இயேசு விவகாரத்து செய்ய வேண்டும் என்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல். இருப்பினும், இப்படிப்பட்ட போராட்ட குணமுள்ள கன்னியர்கள் சமூக மாற்றத்திற்கும், சபை மாற்றத்திற்கும் தேவையாக இருக்கிறார்கள் என்பதனை கிறித்தவர்கள் உணர வேண்டும்.

“கன்னியர்கள் அனைவரும் பாதிரியார்களின் சுயநலத்திற்கு அடிமையாகி, ஆத்மாவை இழக்கிறார்கள்” என்கிற லூசியின் வாதம் ஏற்புடையதே. அதனால்தான் அவர், “சபலப் பாதிரியார்களின் உல்லாச மனதிற்கு பல கன்னியர்கள் ஒத்துழைக்கிறார்கள்” என்கிறார். பாலியல் இன்பம் என்பது மனித உடலுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். “இவன், தனிமையில் இருப்பது நல்லதல்ல” என்பதுதான் யகோவா கடவுளின் கட்டளை. தனிமையில் இருக்கிற பாதிரியார்களும் கன்னியர்களும் தவறாக நடந்து கொள்கிறார்கள். இதற்கு மாற்றுதான் என்ன?

“பாதிரியார்கள் கைப்படாத யாராவது நம்மிடம் இருக்கிறார்களா?” என்கிற லூசி களப்புராவின் கேள்வி நியாயமானதே. அதற்கு மாற்று என்பது துறவறம் அல்ல; இல்லறம். இல்லறத்தில் இருந்துகொண்டு இறைபணி. சிந்தித்தால், கத்தோலிக்கம் உருப்படும். இல்லையெனில், கடவுளின் பார்வையில் எப்போதும் விபசார குடியாகவே இருக்கும்.

திருத்தமிழ்த்தேவனார், நாகர்கோவில், பேச: 8300207193.
தமிழ்நாடு

நன்றி : Poondi Murugan

Previous article15வயது மாணவியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி
Next articleதடைசெய்யப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here