திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்னால் கடற்படைக்கு சொந்தமான காரில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபரொருவர் வைத்தியரொருவரை தாக்கிய சம்பவமொன்று திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையிலிருந்து நேற்று (07.01.2023) பிற்பகல் கடமையை முடித்து விட்டு வைத்தியர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது,
கடற்படை அதிகாரி ஒருவரின் வாகனம் வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தமையினால், கடற்படை வாகனத்தில் வந்தவர் வீதியோரத்தில் நிற்க முடியாதா என கேட்டு இறங்கி தாக்கியதாக வைத்தியரின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் நோயாளர்கள் அனுமதிக்கும் அறையில் கடமையாற்றி வரும் ரோமன் ஜெபரெட்ணம் (44வயது) எனவும் தெரிய வருகிறது.
தாக்குதலுக்குள்ளான வைத்தியர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிசார் தெரிவித்தனர்.