தமது முச்சக்கரவண்டியில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியை வீதியில் கிடத்திவிட்டு, வேறொரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய நபரொருவரும் அவரது மகளும் நான்கு வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பதுளை மாவட்டம் கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முத்துமால கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளியான தாயொருவர் தனது 2 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு (2018.05.11) முத்துமால கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்க சென்றுள்ளார்
குறித்த தேயிலை தோட்டத்தின் உரிமையாளர் அந்த 2 வயது குழந்தையை தமது வீட்டில் வைத்துக்கொண்டு குழந்தையின் தாயை தேயிலை தோட்டத்திற்கு கொழுந்து பறிக்க அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து விட்டதாக குழந்தையின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேயிலை கொழுந்து ஏற்றிவரும் லொறியிலேயே 2 வயது பெண்குழந்தை அடிபட்டு உயிரிழந்து விட்டதாகவும் தோட்ட நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார்.
எனினும், குழந்தையின் பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை பாரவூர்தியில் அடிபட்டு உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லொறியின் சாரதி விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த விசாரணைகள் பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் 2021 டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டது.
பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்யட்சகர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் முத்திக குணசேகர இணைந்து அதன்படி பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த சாமிந்த தலைமையில் கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுத்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்பிரகாரம், 78 வயதுடைய தந்தை ஒருவரும் 43 வயதுடைய மகளும் சந்தேகத்தின் பேரில், 2022.12.28ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் பல அதிர்ச்சி தகல்களை வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான குறித்த பெண் ஓட்டிச்சென்ற முச்சக்கரவண்டியில் அக்குழந்தை மோதி உயிரிழந்துள்ளது. இந்நிலையில், தகப்பனும் மகளும் சேர்ந்து குழந்தையை தூக்கி வந்து வீதியில் கிடத்தி குழந்தை தோட்டத்தில் கொழுந்து ஏற்றும் லொறியில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமபடியதாக விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், வியாழக்கிழமை (29) ஆஜர்படுத்திய போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 2023 ஜனவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்