போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையே கண்டியில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானமைக்கான காரணம் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குத்தச்சண்ணடை வீரர், 10கிராம் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர் இந்த மாதம் 12ஆம் திகதி இரவு 8 மணியளவில் கண்டி வைத்தியசாலை லேனிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் வைத்து, ஓட்டோவொன்றில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டிருந்த இளைஞர் ஹந்தானை பகுதியிலுள்ள பாழடைந்த இடமொன்றுக்கு அருகிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனின் தாய்க்கு எதிராகவும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் போகம்பர பிரதேசத்திலுள்ள போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவால் இளைஞர் கடத்திச் செல்லப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதென்றும் அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.