Home battinews ஆசிரியர் தாக்கியதில் நடக்க முடியாத மாணவன்

ஆசிரியர் தாக்கியதில் நடக்க முடியாத மாணவன்

8

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவனுக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனையிலுள்ள பாடசாலையில் தரம் 09இல் கற்கும் ஐ.அப்துல் ஹாதிக் எனும் மாணவனே, இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி குறித்த பாடசாலையில் வைத்து ஆசிரியர் ஒருவர் தனக்கு பிரம்பால் அடித்து, தனது ‘சேர்ட் கொலரை’ பிடித்து தூக்கி, தூணில் அடித்து விட்டு, தன்னை தூக்கி வீசியதாக மாணவர் ஹாதிக் தெரிவிக்கின்றார்.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் ஆகியவற்றில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே, மனித உரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறையிட்டதாகவும் மாணவனின் தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) தெரிவித்தனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மறுத்துள்ளார்.

இதேவேளை, “சம்பவம் நடந்து 06 நாட்களின் பின்னர் எனக்கும் எனது பெரியப்பா மற்றும் அவரின் மகனுக்கும் எதிராக பாடசாலையின் அதிபர், நாங்கள் அவரை அச்சுறுத்தியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது பொய்யான முறைப்பாடு” என பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் யு.எல். முபாஹித் தெரிவித்தார்.

Previous articleடொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த செய்தி உண்மையா?
Next articleசடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி